Tuesday, 16 August 2011

சித்தாள்




உச்சி வெயிலு
கால பதம் பார்க்குது
மிச்ச(ம்) இருக்குற
கல்லப் பார்த்தா,
எச்சி வறண்டு
நாக்கும் ஒட்டி போகுது!

கல்ல தலயிலயும்
கனவ மனசிலயும்
தூக்கிட்டு போறேன்...

எனக்கும் வருவான்
ஒருத்தன் ராசாப் போல!
என்ன பார்த்துபான்
அவன் ரோசாப் போல!

சொமதூக்க விடமாட்டான்
ஒருநாளும்! -எனக்கு
இமப்போல காவலிருப்பான்
எந்நாளும்!

வேர்த்து வேலைசெஞ்சி
பசியா வரும் என் ராசாக்கு
சோறு கறி சமைச்சி
ருசியா நான் போடுவேன்!

ஏப்பம் விட்டு என் ஐயா
எழுந்த பின்னே
அந்த எச்சி தட்டில்
சோறுபோட்டு சுவையா
நானும் திம்பேன்!

புள்ளைங்க ரெண்டு
சீக்கிரமா பெத்துபேன்...
அதுங்க கிட்ட நானும்
அ.ஆ.இ.ஈ... கத்துபேன்!

சொமதூக்க வுடமாட்டேன்
என் புள்ளைங்கள
என்னபோல ஒருநாளும்!

இமபோல பார்த்துபேன்
என் ராசா போல
எந்நாளும்!


ஷீ-நிசி

17 comments:

Ramani said...

சொமதூக்க வுடமாட்டேன்
என் புள்ளைங்கள
என்னபோல ஒருநாளும்!

அருமை அருமை
சித்தாளின் மொழியிலேயே
சித்தாளின் வாழ்க்கையும்
சித்தாளின் ஆசையும்
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

சொமதூக்க வுடமாட்டேன்
என் புள்ளைங்கள
என்னபோல ஒருநாளும்!

இமபோல பார்த்துபேன்
என் ராசா போல
எந்நாளும்! //

nice

-தோழன் மபா, தமிழன் வீதி said...

கவிதை அருமை தோழா!
'சித்தாள் உழைக்க
வீட்டில்
மற்ற ஆள்
சாப்பிடுகிறது'

பலே பிரபு said...

அருமை... ஆனால் பிள்ளைகள் பற்றிய கனவு பலிக்க மட்டுமே நிறைய பெண்கள் போராடுகின்றனர். அவர்கள் உழைப்பு திருமணத்துக்கு பின்னும் தொடர்கிறது.

மகேந்திரன் said...

யதார்த்தம் சிறகடிக்கிறது கவியில்
அருமை.

நிரூபன் said...

வணக்கம் சகோ,
என் நெட் கனெக்சன் ப்ராப்ளம் ஆகிடுச்சி, ஆதலால் வலைக்கு வர முடியலை, வியாழன் தான் நெட் கனெக்சனை சரி பண்ணுவாங்க.

உங்களுக்கும், உங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த,
பிந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...

வட்டார மொழி நடையோடு, கடினமாக வேலை செய்யும் சித்தாளின் உணர்வுகளை, அவளின் கடும் உழைப்பிற்கும் ஓர் நாளில் விடிவு கிடைக்கும் எனும் நம்பிக்கை உணர்வு மனதில் எழும் வண்ணமும்,
அவளைத் தேடி ஓர் நாயகன் வரும் போது அவள் வாழ்வும் வசந்தமாகும் எனும் நம்பிக்கை வரிகள் தவழ்ந்து வர அருமையாகப் படைத்திருக்கிறீங்க.

பாரத்... பாரதி... said...

சித்தாள்களை ஏராளமாக பார்க்கின்ற இன்றைய சமூகத்தில், உங்கள் கவிதை அவர்களுடைய வாழ்க்கையை வெளிப்படுத்தி, நம்பிக்கையுடன் முடிவடைகிறது... பாராட்டுக்கள்..

பாரத்... பாரதி... said...

தொடர்ந்து எழுதுங்கள்... காத்திருக்கிறோம்..

கந்தசாமி. said...

சித்தாளின் உணர்வுகளை மட்டுமல்ல வறுமையால் தன கல்வி விடுத்து கூலி தொழில் செய்யும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கவி..வாழ்த்துக்கள் பாஸ்

ஷீ-நிசி said...

அனைவருக்கும் என் நன்றிகள் நண்பர்களே

அமைதிச்சாரல் said...

கனவுகளும் ஆசைகளும் அனைவருக்கும் பொதுவானதுன்னு அருமையா எடுத்துக்காட்டுது கவிதை.. அவரின் கனவு நிறைவேறட்டும்.

ஜீ... said...

அருமை! அருமை!

தமிழ்வாசி - Prakash said...

நண்பரே... இன்று தான் உங்கள் வலைக்கு வருகை தருகிறேன்.. இனி தொடர்கிறேன்

தமிழ்வாசி - Prakash said...

அருமையான யதார்த்த கவிதை...

ஷீ-நிசி said...

நன்றி நண்பர்களே

நட்புடன் ஜமால் said...

கடைசி நாலு பத்திகள்

என்னை பற்றி கொண்டன

சிறப்பு நண்பா