Monday, 1 August 2011

தாய்ப்பாசம்
நெல்வயலில் களையெடுக்கும் தாய். அவளது குழந்தை வயல் ஓரமாக அமைந்த மரத்தின் கிளையில் தூளியிட்டு படுத்துக் கிடக்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் பசிவந்து அக்குழந்தை பசியில் அழுகிறது! மகவுக்கு பால் கொடுக்கச் சென்றால் வரப்பில் நிற்கும் பண்ணையார் ஏசுவார். பால் கொடுக்காமல் இருந்தாலோ குழந்தை அழுது அழுது தொண்டை வறண்டு போகும். இப்படி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அந்த தாய் இருதலைக் கொள்ளி எறும்பாய் துன்பப்படுகிறாள்! அவள் மனதில் நினைத்திருக்கும் வரிகள் இங்கே கவிதையாக!


மரத்தில தூளி கட்டி,
மவராசன தூங்க வச்சி...

நல்ல வெயிலு பின்னியெடுக்க,
நான் இறங்கினேன்..
நெல்லு வயல்ல களையெடுக்க;

கண்ணு என்னமோ நெல்லு மேல,
கவனம் எல்லாமே பிள்ள மேல!

செத்த நேரந்தான் ஆகிருக்கும்..
பெத்த புள்ள அழுதிட்டிருக்கு!

பரபரன்னு ஏறினேன்,
வயற்பரப்பு மேல...

பசியால அழுது துடிக்குது
பச்ச புள்ள குரலு! -அதுக்கும்
மசியாம என்ன வெரட்டுது
பண்ணையாரு குரலு!

அழாதேடா கண்ணு!
ஆத்தா அடிவயிறு வலிக்குது!

என்ன செய்யறதுன்னு,
புரியாம என் மனசு தவிக்குது!

பண்ணையார எதித்து,
பால்கொடுக்க நான் வந்தா,
இந்த வேளைக்கு பசியாறும்...

அடுத்த வேளைக்கு....
நான் எங்க போவேன்?

அடுத்த வேலைக்கு
நான் எங்க போவேன்?

வேலய முடிச்சி
வெரசா வாரேன்!
என் மக ராசா!

அது வரைக்கும்..
காத்தனுப்பி தூங்க வையி!
என் மர ராசா!


ஷீ-நிசி

24 comments:

மகேந்திரன் said...

மனதைத் தொடும்
கிராமியப் பாடல் நண்பரே.
மனம் கமழ்கிறது.

கந்தசாமி. said...

ஒரு ஏழை தாயின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதை அழகு...

நிரூபன் said...

வணக்கம் சகோ,
கிராமிய மொழி நடையில், மண் வாசனையோடு தத்தளிக்கும் ஒரு தாயுள்ளத்தின் உணர்வினைப் கவியாக்கியிருக்கிறீங்க.
வேதனை கலந்த வாழ்வினை வலியோடு தொடரும்...ஏழைகள்ன் குரலினை கவிதை தாங்கி வ்ந்திருக்கிறது.

ஷீ-நிசி said...

நன்றி மகேந்திரன்....

நன்றி கந்தசாமி....

நன்றி நிரூபன்.....

அமைதிச்சாரல் said...

ரொம்ப நல்லாருக்கு..

மைந்தன் சிவா said...

நல்லா இருக்கு கவிதை..கிராமிய மணம் கலந்து!!

ஷீ-நிசி said...

நன்றி அமைதிச்சாரல்

நன்றி சிவா

M.R said...

தாய் உணர்வை வெளிப்படுத்தும் அருமையான கிராமிய கவிதை வரிகள்
அருமை நண்பரே

பகிர்வுக்கு நன்றி

ஷீ-நிசி said...

நன்றி எம்.ஆர்!

ரிஷபன் said...

அழாதேடா கண்ணு!
ஆத்தா அடிவயிறு வலிக்குது!

என்ன செய்யறதுன்னு,
புரியாம என் மனசு தவிக்குது!

தாய் மனசை அப்படியே படம் பிடித்த கிராமீய மணம் கமழும் வரிகள்..
மர ராசா.. சபாஷ்.. அந்த வார்த்தைப் பிரயோகம் என்னைக் கவர்ந்து விட்டது

ஷீ-நிசி said...

நன்றி ரிஷபன்.....

உங்களின் ஆழமான ரசனைக்கு நன்றி நண்பரே

நட்புடன் ஜமால் said...

நிஜமாய் அடிவயிறு வலித்தது

ஹேமா said...

களையெடுக்கும் நிகழ்வை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறீர்கள் ஸ்ரீ-நிசி !

குடந்தை அன்புமணி said...

பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாதஇதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...

மஞ்சுபாஷிணி said...

தாய்ப்பாசத்தை மிஞ்சும் சக்தி உலகிலேயே இல்லை எனலாம். எளிய நடையில் தாயின் பரிதவிப்பை அப்படியே சொன்ன வரிகள் மிக சிறப்பு...

அன்பு வாழ்த்துகள் ஷீநிசி.

இராஜராஜேஸ்வரி said...

நெல்லும் பிள்ளையும் சிறப்பாய் வளர வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி said...

நன்றி நண்பர்களே!!

கார்த்தி said...

இயலாமையுடன் தாயின் பாச ஏக்கங்கள்!!

ராமலக்ஷ்மி said...

மிக நன்று.

அம்பாளடியாள் said...

கிராமிய நடையில் நீங்கள் வடித்த கவிதை அருமை சகோ வாழ்த்துக்கள் .தமிழ்மணம் 3

சாகம்பரி said...

என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (4/11/11 -வெள்ளிக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/

Dhanalakshmi said...

nalla kavidhai.....

chandhan-lakshmi.blogspot.com

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல யதார்தமான கவிதை!

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.