Tuesday, 16 August 2011

சித்தாள்
உச்சி வெயிலு
கால பதம் பார்க்குது
மிச்ச(ம்) இருக்குற
கல்லப் பார்த்தா,
எச்சி வறண்டு
நாக்கும் ஒட்டி போகுது!

கல்ல தலயிலயும்
கனவ மனசிலயும்
தூக்கிட்டு போறேன்...

எனக்கும் வருவான்
ஒருத்தன் ராசாப் போல!
என்ன பார்த்துபான்
அவன் ரோசாப் போல!

சொமதூக்க விடமாட்டான்
ஒருநாளும்! -எனக்கு
இமப்போல காவலிருப்பான்
எந்நாளும்!

வேர்த்து வேலைசெஞ்சி
பசியா வரும் என் ராசாக்கு
சோறு கறி சமைச்சி
ருசியா நான் போடுவேன்!

ஏப்பம் விட்டு என் ஐயா
எழுந்த பின்னே
அந்த எச்சி தட்டில்
சோறுபோட்டு சுவையா
நானும் திம்பேன்!

புள்ளைங்க ரெண்டு
சீக்கிரமா பெத்துபேன்...
அதுங்க கிட்ட நானும்
அ.ஆ.இ.ஈ... கத்துபேன்!

சொமதூக்க வுடமாட்டேன்
என் புள்ளைங்கள
என்னபோல ஒருநாளும்!

இமபோல பார்த்துபேன்
என் ராசா போல
எந்நாளும்!


ஷீ-நிசி

Monday, 8 August 2011

பாரதி காணாத புதுமைப் பெண்
எட்டி நிற்கும்
நிலவு மட்டுமல்ல,
சுட்டெரிக்கும்
சூரியனும் தான் நீ!!

முகமூடிகளை
அணியாதவள்!
முகம் வாடி தலை
குனியாதவள்!

உன் விரல் சிந்தும்
வார்த்தைகளோ
ஞானிகளின் ரகம்!

உன் இதழ் சிந்தும்
புன்னகைகளோ,
ராணிகளின் ரகம்!

வாழ்வின் ஒரு பாதி,
கற்றுக்கொள்ளாமலே
பெற்றுக்கொண்டவள்!

மறுபாதி,
பெற்றுக்கொள்ளாமலே
கற்றுக்கொண்டவள்!

தமிழ் மொழியென்றால்
உன் விழிகளிரண்டும்
பரவசமடையும்!

கலாச்சாரமும், பண்பாடும்
உன் மொழிகளிலின்று
மறு பிரசவமடையும்!

இன்று!
பாரதியிருந்தால்
சொல்லியிருப்பான் -நீதான்
புதுமைப் பெண்னென்று!

அன்று,
சொன்னவளுக்கு
இட்டிருப்பான் பேரை
முதுமைப் பெண்னென்று!


ஷீ-நிசி

Thursday, 4 August 2011

இந்த நட்சத்திரங்கள்எந்த வெள்ளை புறா
நடந்து சென்ற பாத சுவடுகள்
இந்த நட்சத்திரங்கள்?!

வானம் இரவு நேரங்களில்
போர்த்திக் கொள்ளும்
பொத்தல் நிறைந்த போர்வையா
இந்த நட்சத்திரங்கள்?!

பால் நிலா தோட்டத்தில்
பூத்திருக்கும்
தேன் மல்லிப் பூக்களா
இந்த நட்சத்திரங்கள்?!

வானம் சுத்தம்
செய்யப்படுவதற்காய்
தெளிக்கப்பட்ட சோப்பு நுரைகளா
இந்த நட்சத்திரங்கள்?!

மேக தேவதைகளின்
உறக்கத்திற்காய்
வான் மெத்தை மேல்
தூவப்பட்ட வெள்ளிப் பூக்களா
இந்த நட்சத்திரங்கள்?!

நிலாவிற்கு
வர்ணம் பூசினப்போது
சிந்தின துளிகளா
இந்த நட்சத்திரங்கள்?!

விதியினை எழுதும் எழுதுகோலில்
மை உள்ளதா என்று
இறைவன் உதறிப் பார்த்த துளிகளா
இந்த நட்சத்திரங்கள்?!

வானம் இரவு நேரங்களில்
கீழே விழுந்து விடாமலிருக்க
குத்தப்பட்ட குண்டூசிகளா
இந்த நட்சத்திரங்கள்?!

நட்சத்திரங்களிடமே கேட்டேன்?!

விடை கிடைக்குமுன்பே
விடை பெற்றுக்கொண்டது;
என் நட்சத்திர கனவு
அலாரத்தின் கதறலால்.....


ஷீ-நிசி

Monday, 1 August 2011

தாய்ப்பாசம்
நெல்வயலில் களையெடுக்கும் தாய். அவளது குழந்தை வயல் ஓரமாக அமைந்த மரத்தின் கிளையில் தூளியிட்டு படுத்துக் கிடக்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் பசிவந்து அக்குழந்தை பசியில் அழுகிறது! மகவுக்கு பால் கொடுக்கச் சென்றால் வரப்பில் நிற்கும் பண்ணையார் ஏசுவார். பால் கொடுக்காமல் இருந்தாலோ குழந்தை அழுது அழுது தொண்டை வறண்டு போகும். இப்படி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அந்த தாய் இருதலைக் கொள்ளி எறும்பாய் துன்பப்படுகிறாள்! அவள் மனதில் நினைத்திருக்கும் வரிகள் இங்கே கவிதையாக!


மரத்தில தூளி கட்டி,
மவராசன தூங்க வச்சி...

நல்ல வெயிலு பின்னியெடுக்க,
நான் இறங்கினேன்..
நெல்லு வயல்ல களையெடுக்க;

கண்ணு என்னமோ நெல்லு மேல,
கவனம் எல்லாமே பிள்ள மேல!

செத்த நேரந்தான் ஆகிருக்கும்..
பெத்த புள்ள அழுதிட்டிருக்கு!

பரபரன்னு ஏறினேன்,
வயற்பரப்பு மேல...

பசியால அழுது துடிக்குது
பச்ச புள்ள குரலு! -அதுக்கும்
மசியாம என்ன வெரட்டுது
பண்ணையாரு குரலு!

அழாதேடா கண்ணு!
ஆத்தா அடிவயிறு வலிக்குது!

என்ன செய்யறதுன்னு,
புரியாம என் மனசு தவிக்குது!

பண்ணையார எதித்து,
பால்கொடுக்க நான் வந்தா,
இந்த வேளைக்கு பசியாறும்...

அடுத்த வேளைக்கு....
நான் எங்க போவேன்?

அடுத்த வேலைக்கு
நான் எங்க போவேன்?

வேலய முடிச்சி
வெரசா வாரேன்!
என் மக ராசா!

அது வரைக்கும்..
காத்தனுப்பி தூங்க வையி!
என் மர ராசா!


ஷீ-நிசி