Saturday, 13 June 2009

காதல் காலம்....




மெல்லிய தூறல்
விழுந்துக்கொண்டிருக்கும்
மழைக் காலம்!
மாலைக் காலம்!!

வானம் வடிகட்டி,
பூமிக்கு அனுப்பிக்கொண்டிருந்தது..
சுத்தமான மழைத்துளிகளை!

அலைபேசி அலறியது...

”இதோ வந்துவிட்டேன்”..
என் நிலா செய்தியனுப்பினாள்!

எங்கிருக்கிறாய்? என்று
எண்ணிலா செய்தியனுப்பியபின்!

வழக்கமாக சந்திக்கும் பூங்காதான்!

அன்று மட்டும்
பூக்களெல்லாம் குளித்து,
தலைதுவட்டாமலிருந்தன!

சுற்றிக் கொண்டே,
வந்தவனின் கண்கள்
ஓரிடத்தில் நின்றன.

தலைதுவட்டாமலிருந்த
பூக்களில் ஓன்று, பூங்காவிற்குள்
நுழைந்துக்கொண்டிருந்தது!

கைப்பை குடையாய்
மாறியிருந்தது..

அவள் கூந்தலை தொடமுடியாத
மழைத்துளிகளெல்லாம்,
பையோடு யுத்தமிட்டு -அவள்
கைவழியே வழிந்தன!

பூமியில் தேங்கியிருந்த
வான் துளிகளை
அவள் பாதங்கள் தொட்டன,

அக்கணத்தில், அக்கர்வத்தில்
இருபக்கமும் தெறித்துநினறு
அவைகள் அவளை
வரவேற்றன...

ஒவ்வொரு அடியிலும்
தண்ணீர் பூக்கள் தெறித்தன!

அருகே வந்தவள்
ஸாரி..டா என்றாள்!

மரத்தினிலையால்,
மழைத்துளிகள் தொடாத
இடத்தில் அமர்ந்தோம்!

மரங்களுக்கிடையில் சிக்கின
மழைத்துளிகளுக்குள் வாக்குவாதம்!
அவள் மீது விழுந்திட விரும்பி -அதில்

வெற்றிபெற்ற துளிகள்..
அவள் மீதும்,
தோல்வியடைந்த துளிகள்
என் மீதும்,
அவ்வப்போது ஒவ்வொன்றாய்
விழுந்துக்கொண்டேயிருந்தன!

பேசிக்கொண்டேயிருந்ததில்,
வானத்திலும் ஒரு நிலா
வந்துவிட்டதை கவனிக்கவில்லை!

நேரமாகியது என்றாள்...
ஈரமான தலையை
துவட்டிக்கொண்டே!

பூங்காவை விட்டு
வெளியேறினோம்!

சற்றுமுன் தலைதுவட்டிக்
கொண்டிருந்த பூக்களில் பல,
காம்பின் வழியே
அழுதுகொண்டிருந்தது!

காவல்காரன்
வினோதமாய் பார்த்தான்...

பூங்காவின் பூவை
ஏன் எடுத்துச்செல்கிறாய்
என்று பார்ப்பதுபோல்!

என் இருசக்கர வாகனத்தின்
பின்னிருக்கை, என்னிருக்கையை
ஏளனமாய் பார்த்தது..

தோளை தொட்டபடி
ஏறியமர்ந்தாள் வாகனத்தில்...

பூங்காவிற்கு கையசைத்து
விடைபெற்றோம்!

ஒரு மெல்லிய காற்று
உண்டானது!

பூக்களெல்லாம்
எங்களைநோக்கி கையசைத்தன...

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

11 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா! அருமையான காலம்.

\\பேசிக்கொண்டேயிருந்ததில்,
வானத்திலும் ஒரு நிலா
வந்துவிட்டதை கவனிக்கவில்லை!\

\\பூக்களெல்லாம்
எங்களைநோக்கி கையசைத்தன...\\

மிகவும் இரசித்தேன் ...

"அகநாழிகை" said...

கவிதை படித்த பின் காதலில் நனைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறேன்.
இப்படி ஆறு மாதத்திற்கு ஒரு முறை கவிதை போட்டா எப்படி ?
அடிக்கடி போடுங்கப்பு.

ச.முத்துவேல் said...

தலை துவட்டாத பூக்கள் போன்ற வரிகள் எல்லாம் நல்ல கற்பனை, கவித்துவம். நல்லாயிருக்கு.(ஏற்கனவே போட்டிருந்தீங்களே. நானும் படிச்சுருக்குக்கேனே. மீள்பதிவா?)

புதியவன் said...

ஒரு பூங்காவில் உட்கார்ந்து ஒரு காதல் ஜோடியை
ரசித்த உணர்வுகளை கொண்டுவந்து விடாது,
எளிமையான வரிகளில்
அருமையான கவிதை ஷீ-நிசி...

புதியவன் said...

//மரங்களுக்கிடையில் சிக்கின
மழைத்துளிகளுக்குள் வாக்குவாதம்!
அவள் மீது விழுந்திட விரும்பி -அதில்

வெற்றிபெற்ற துளிகள்..
அவள் மீதும்,
தோல்வியடைந்த துளிகள்
என் மீதும்,
அவ்வப்போது ஒவ்வொன்றாய்
விழுந்துக்கொண்டேயிருந்தன!//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...

thevanmayam said...

ஒரு அழகான காதல் கதை சொல்லிவிட்டீர்கள்!!

ஆ.ஞானசேகரன் said...

//அன்று மட்டும்
பூக்களெல்லாம் குளித்து,
தலைதுவட்டாமலிருந்தன!//

ஆகா.

ஆ.ஞானசேகரன் said...

//சற்றுமுன் தலைதுவட்டிக்
கொண்டிருந்த பூக்களில் பல,
காம்பின் வழியே
அழுதுகொண்டிருந்தது!//

அனைத்தும் காதலைப்பற்றி சொல்லும் அழகான வரிகள் பாராட்டுகள்

பாலா said...

yappppppppppppppppppppa mudiyalappa
mudiyala

arumai

ஷீ-நிசி said...

நன்றி நண்பர்களே!

வால்பையன் said...

ரொம்ப நாளா ஆளக்காணோமே தல!