Thursday, 23 April 2009

கரையோர மீன்கள்
போய்வருகிறேன்
என்று சொல்லி,
விடைபெற்றனர் நால்வரும்!

புதுமனைவிக்கு
கையசைத்தான் ஒருவன்!

நேற்று தந்தையாக்கிய
குழந்தைக்கு விரலசைத்தான்
மற்றொருவன்!

காதலிக்கு கண்ணசைத்தான்
இன்னொருவன்!

நிச்சயிக்கபட்டவளை
எண்ணி நினைவசைத்தான்
வேறொருவன்!

கடலில் மீன் பிடிக்க
புறப்பட்டன கடலோர மீன்கள்!

கரையோரத்தில் வாழும்
மீன் கூட்டங்கள்!

சுனாமிக்கும், சூறாவளிக்கும்
தப்பியதில்லை குடிசைகள்!

அடங்கியபின்,
மீண்டும் அங்கேயே
குடிசைபோடும்,
அசராத கடல் மைந்தர்கள்!

நிச்சயமில்லாத
பயணம்தான் நாளும்!

நிச்சயமில்லாததாலேயே
பயணங்களும் நீளும்!

ஒரு நாள் பயணமும் உண்டு!
ஒரு வார பயணமும் உண்டு!

அதிர்ஷ்டம் இருந்தால்
மீனிலே சிக்கி
வலையே கிழியும்!

அதிர்ஷ்டம் இறந்தால்
வீணிலே சிக்கி
வலை மட்டுமே கிழியும்!

வாகனம்,
காட்டிலே பழுதானால்
காலார நடக்கலாம்!

கடலிலே பழுதானால்?!

தூரத்தில் மிதக்கும்
கட்டையும் கூட,
காப்பாற்றப்போகும்
படகாய் தோன்றும்!

தண்ணீரும், அரிசியும்
தவணைமுறையில்
உட்கொள்ளவேண்டும்!

கடல்வீதியை,
கிழித்துக்கொண்டு பயணமானது;
நால்வரோடும் -அந்த
வாழ்க்கைப் படகு!

ஆகாயத்தில் ஆடாமல்
நிற்கும் நிலா,
கடலின் மீது மட்டும்
ஆடிக்கொண்டேயிருந்தது!

படகோ, நடுக்கடலில்
இளைப்பாறிக்கொண்டிருந்தது!

வலைவீசி காத்திருந்தனர்!

வீசின ஒவ்வோரிடத்திலும்
மீன்களைத் தவர
வேறெல்லாம் சிக்கின!

அதோ! அங்கே சென்றால்
மீன்களை அள்ளலாம்
என்றான் ஒருவன்!

அவன் விரல்கள்
”எல்லை”த் தாண்டி காட்டியது!

வேண்டாம் என்றான்
மற்றொருவன்!

வெறுங்கையுடனா
கரைக்கு செல்வது?!

சிக்கினால்,
வெறுங்கை கூட
கரைக்கு செல்லாது!

வாக்குவாதம் முற்றி
எல்லை தாண்டியது..

வாதமும்! படகும்!

படகின் சத்தத்தையும்,
விளக்கையும் அணைத்தனர்!

இருளோடு கலந்து
வலை வீசினர் கடலில்!
நடுக்கம் வாட்டியது
அவர்கள் உடலில்!

தூரத்தில் மின்னொளியில்
ஊர்ந்துவந்தது ஓர் படகு!

சந்தேகமேயில்லை,
கடல் கொள்ளையர்கள்தான்!

கதறினான்,
புது மனைவி கண்டவன்!

கடல்கொள்ளையர்களிடம்
ஒரு கொள்கை உண்டு!

பக்கத்தில் வந்துவிட்டால்
படகை ஓட்டக்கூடாது!

உடன்பட்டால்
உயிர் மட்டும் தப்பும்!
மற்றவைகள் சூறையாடப்படும்!

மீறினால் உயிரும் கூட
சூறையாடப்படும்!

காதலிக்கு கண்ணசைத்தவன்
தான் படகையும் அசைப்பவன்!
(ஒட்டுநர்)

கடல் கொள்ளையர்களின்
படகை கண்டதும்,
இன்ஜினை முடுக்கினான்..
ஏதோவொரு வேகத்தில்!

எட்டும் தூரத்தில்
நெருங்கியது படகு
அவர்களின் பக்கத்தில்!

ஒரு கண்மூடி, ஒரு கண்வழியே
குறிபார்த்தான் கொள்ளையன்!

துப்பாக்கி குண்டு,
தப்பாமல் முடித்தது
தன்கடமையை..
அவன் மார்பில்!

தேக்கிவைத்த காதலெல்லாம்
இரத்தமாய் வழிந்தது
அவன் மார்பின் வழியே!

காதலியின் முகத்தை
நினைவில் நிறுத்தி -தன்
சுவாசத்தை நிறுத்தினான்..

தந்தையானவனும்,
கணவனானவனும
சடுதியில் குதித்தனர்!

கடலின் மடியில்,
படகின் அடியில்
ஒளிந்தனர்!

நிச்சயிக்கபட்டவன்,
நிச்சயிக்கபட்டான்!
இன்னொரு குறிக்கு!

இந்தக் குண்டு அவன்
வயிற்றை நேசித்தது!

குடலையும் குருதியையும்
பெற்றெடுத்து இறந்தான்...

விலைமதிப்புள்ள பல
வலையையும், கயிறையும்
சூறையாடினர்....

சுற்றும் முற்றும் தேடிவிட்டு
அடுத்த உயிரை எடுக்க
படகை எடுத்தனர்...
கடல் எமதர்மர்கள்!

கடலின் மடியில்
விழுந்த இருவர் மட்டும்
கரை சேர்ந்தனர்!

இறந்தவனின் சொந்தங்கள்
அழுது புரண்டன!

மீண்டவனின் சொந்தங்கள்
அழுவதா?! சிரிப்பதா?!
என்று மிரண்டன!

ஊர்த்தலைவர்கள்
கோட்டையில் நின்றனர்!

தலைப்புச் செய்தி:
கடல்கொளையர்களின் அட்டகாசத்தை
தடுக்க மத்திய அரசுக்கு கடிதம்!

ஒரு வாரம் கழித்து....

போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்.....

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

32 comments:

புதியவன் said...

//கடலில் மீன் பிடிக்க
புறப்பட்டன கடலோர மீன்கள்!//

நல்லா இருக்கு இந்த வரிகள்...

சமீபத்திய நிகழ்வை கவிதையில் அருமையா கொண்டு வந்திருக்கிறீர்கள் ஷீ-நிசி...

//ஒரு வாரம் கழித்து....

போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்.....
//

இதற்கு என்ன பதி சொல்வதென்று தெரியவில்லை...

ஆ.முத்துராமலிங்கம் said...

//கடலில் மீன் பிடிக்க
புறப்பட்டன கடலோர மீன்கள்!//

//அடங்கியபின்,
மீண்டும் அங்கேயே
குடிசைபோடும்,
அசராத கடல் மைந்தர்கள்!//

/அவன் விரல்கள்
”எல்லை”த் தாண்டி காட்டியது!அவன் விரல்கள்
”எல்லை”த் தாண்டி காட்டியது!//

//தேக்கிவைத்த காதலெல்லாம்
இரத்தமாய் வழிந்தது
அவன் மார்பின் வழியே!//

//கடலின் மடியில்,
படகின் அடியில்
ஒளிந்தனர்!//

//குடலையும் குருதியையும்
பெற்றெடுத்து இறந்தான்...//

//தலைப்புச் செய்தி:
கடல்கொளையர்களின் அட்டகாசத்தை
தடுக்க மத்திய அரசுக்கு கடிதம்!

ஒரு வாரம் கழித்து....

போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்.....//

நிரைய வார்த்தகளை வசபடுத்தியிருக்கின்றீகள்- நிசி

சின்ன சின்ன வார்த்தைகளில் சோகங்கள் சேருகின்றன!

அ.மு.செய்யது said...

ஒரு சிறுகதைக்குரிய சுவாரஸியம் உங்கள் கவிதையில்...

ரசித்து படித்தேன்.

sakthi said...

அதிர்ஷ்டம் இருந்தால்
மீனிலே சிக்கி
வலையே கிழியும்!

அதிர்ஷ்டம் இறந்தால்
வீணிலே சிக்கி
வலை மட்டுமே கிழியும்!

arumai pa

sakthi said...

ஆகாயத்தில் ஆடாமல்
நிற்கும் நிலா,
கடலின் மீது மட்டும்
ஆடிக்கொண்டேயிருந்தது!

படகோ, நடுக்கடலில்
இளைப்பாறிக்கொண்டிருந்தது!

வலைவீசி காத்திருந்தனர்!

வீசின ஒவ்வோரிடத்திலும்
மீன்களைத் தவர
வேறெல்லாம் சிக்கின!

nalla erukunga lines

sakthi said...

arumaiyana kathai kavaithai nadaiyil
arputham kavignare

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்த முறையும் கவிஞர் ஒரு கதையோட வந்து இருக்கீங்க.. ரொம்ப எளிமையா.. அழகா.. ஒரு சோகக் க(வி)தை படிச்ச உணர்வு.. நடுவுல சின்ன சின்ன வார்த்தை பிரயோகங்கள்ல அசத்தி இருக்கீங்க.. நல்லா இருக்கு ஷீ.. கடைசி வார்த்தைகள் வாழ்வின் நிதர்சனம்..

"கருவெளி" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...

அருமை....

ஒருவரியில் சொல்வதென்றால்...

எனக்கு சற்றும் நினைவிலில்லா கவிப்பேரரசுவின் "தண்ணீர் தேசத்தை" மீண்டும் நினைவு படுத்தி விட்டீர்கள்...

ஆதவா said...

கடல் கொள்ளையர்களுக்குப் பதில்... இலங்கை அரசு என்று போட்டிருக்கலாம்...

ஒரு கவிதையின் நீளம் எத்தனை அடி என்பது முக்கியமல்ல.. அதன் ஆழம் எத்தனை அடி என்பதுதான் முக்கியம்.. இக்கவிதையின் ஆழத்தில் உள்ளே நுழைந்தால் தண்ணீர் வருகிறது.... கண்களில்.

மிகச்சிறந்த சிறுக(வி)தை.. சொற்களை வைத்து ஆடிய கம்பாட்டம்... வலிக்கிறது சுளீரென்று!

பிரமாதமான நடையில்.... பிரமாதமான கவிதை... மீண்டும்!!!

அபுஅஃப்ஸர் said...

அற்புதமான வரிகள் ஷீநிசி

மீனவர்களின் ஒவ்வொரு அசைவையும் அழகான வரிகளில் வடித்திருக்கிருக்கிரீர்

அபுஅஃப்ஸர் said...

//ஆகாயத்தில் ஆடாமல்
நிற்கும் நிலா,
கடலின் மீது மட்டும்
ஆடிக்கொண்டேயிருந்தது!
//

ரசித்த வரி

அபுஅஃப்ஸர் said...

//ஒரு வாரம் கழித்து....

போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்.....

/

சொல்ல வார்த்தையில்லை... சந்தர்ப்பம்... சூழ்நிலை... வாழ்க்கை விடைதேடி ஒரு பயங்கரபயணம்

சொல்லரசன் said...

//கடல்வீதியை,
கிழித்துக்கொண்டு பயணமானது;
நால்வரோடும் -அந்த
வாழ்க்கைப் படகு!//

அவர்களின் வாழ்க்கை சோகத்தை கவிதையாக்கி எங்களையும் சோகத்தில்
ஆழ்த்திவிட்டீர்கள்.

mythees said...

ஊர்த்தலைவர்கள்
கோட்டையில் நின்றனர்!

தலைப்புச் செய்தி:
கடல்கொளையர்களின் அட்டகாசத்தை
தடுக்க மத்திய அரசுக்கு கடிதம்!

super..........?

யாருக்கு கடிதம் போட்டா சரி யாகும் ...........

இத சொல்லிட்டா கவிதை நல்ல இருக்கும் ........

இது missing .........

கலை - இராகலை said...

மீனவர்களின் வாழ்க்கையை அழகாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கின்றீர்கள்! வழமைப்போலவே உங்கள் நடையில்.

//போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்.....///

????

கலை - இராகலை said...

///கடல் கொள்ளையர்களுக்குப் பதில்... இலங்கை அரசு என்று போட்டிருக்கலாம்..///

ஆதவா சொன்னது போல இதை தான் நானும் எதிர்ப்பார்த்தேன்!!!!

வழிப்போக்கன் said...

நல்ல கதையுள்ள கவிதை....

வழிப்போக்கன் said...

தலைப்புச் செய்தி:
கடல்கொளையர்களின் அட்டகாசத்தை
தடுக்க மத்திய அரசுக்கு கடிதம்!

ஒரு வாரம் கழித்து....

போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்.....
//

என்று தான் தீருமோ இவர்களின் சோகம்????
:(((

ஷீ-நிசி said...

என்னிடமும் பதில் இல்லை புதியவன்..... நன்றி!

நன்றி மு.ரா... பிடித்த வரிகளையெல்லாம் மேற்கோள் காட்டியுள்ளீர்கள்... நன்றி!

நன்றி அ.மு. செய்யது!

நன்றி சக்தி!

நன்றி கா.பா.... எல்லாமே சிறு முயற்சிதான். நீங்கள் பாராட்டும்பொழுது அவை வெற்றியடைவதாய் உணர்கிறேன்!

ஷீ-நிசி said...

நன்றி கருவெளி! தண்ணீர்தேசம் நானும் படித்துள்ளேன். அவற்றோடு ஒப்பிட்டு பார்ப்பது உங்களின் பெருந்தன்மை! கவிப்பேரரசுவின் தண்ணீர் தேசம் பல மடங்கு சிறந்தது!

ஷீ-நிசி said...

நன்றி ஆதவா! நான் அவ்வாறு போடவில்லையென்றாலும் நீ போட்டுவிட்டாய் அல்லவா! :)


ஆழம் அடி! ரசித்தேன் இந்த வார்த்தையை!

ஷீ-நிசி said...

நன்றி அபுஅஃப்ஸர், ஆமாம் அவர்கள் வாழ்க்கையில் தினம் தினம் பயங்கரபயணம் தான்!

நன்றி சொல்லரசன்!


நன்றி மைதீஸ்!
மத்திய அரசுக்கு கடிதம்னு நான் போட்டது வழக்கமாக நடைபெறும் நடைமுறை நிகழ்வை. அவர்கள் கடிதம் போடுவார்கள்... போராட்டம் நடைபெறும். ஆகிலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதல்லவா?! தொழிலுக்கு போகாமல் இருக்க முடியுமா?! மறுபடியும் புறப்படுவார்கள்!

“முடிந்தால் முடியும், தொடர்ந்தால் தொடரும்.. இதுதான் எங்கள் வாழ்க்கை”

வாலியின் வரிகள் படகோட்டி படத்தில்.

இதுதான் அவர்களின் நிலை!

ஷீ-நிசி said...

நன்றி கலை!

நன்றி வழிப்போக்கன்!

ஆ.ஞானசேகரன் said...

//கடலில் மீன் பிடிக்க
புறப்பட்டன கடலோர மீன்கள்!

கரையோரத்தில் வாழும்
மீன் கூட்டங்கள்!//

வரிகள் நன்றாக இருக்கு
நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//வாகனம்,
காட்டிலே பழுதானால்
காலார நடக்கலாம்!

கடலிலே பழுதானால்?!//

அடுத்த பதிவில் விமானமா?

ஆ.ஞானசேகரன் said...

//ஒரு வாரம் கழித்து....

போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்.....//


எல்லாம் நியாமான எதார்த்தம்..

லவ்டேல் மேடி said...

// போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்..... //


// கடலில் மீன் பிடிக்க
புறப்பட்டன கடலோர மீன்கள்! //
அருமை......... !! ஓவ்வொரு வரிகளும் மிகவும் அருமை......!! வாழ்த்துக்கள்.....!!!

ஷீ-நிசி said...

நன்றி ஞானசேகரன்

நன்றி மேடி

SASee said...

ஷீ-நிசி அவர்களே

சில வாரங்களுக்குப் பிறகு வலையுலகத்தை எட்டிப்பார்த்தேன்.
காரணம், நிறுவன விடுமுறை வலையுலகத்தை மறப்பதாய் கற்பனை செய்ய வைத்தது.

என் வலையில் பதிவுகளை இடும் முன் தங்களை கவி வலையில் சிக்கி ரசித்தேன் கரையோர மீன்களை.

அற்புதமான இருக்கமான வரிகளில் மீனவமைந்தர்களின் இலக்கியமே உருவாக்குவதற்கான அடித்தளம்.

அற்புதமைய்யா.....

ஷீ-நிசி said...

நன்றி சசி! நன்றி!

குடந்தைஅன்புமணி said...

மீனவர்களின் வாழ்க்கை முறையை அற்புதமாக விவரித்திருக்கிறீர்கள், கவிதையில் ஒரு காவியமாய்!

agaligan said...

ஊர்த்தலைவர்கள்
கோட்டையில் நின்றனர்!

கண்துடைப்பு,

போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்

யதார்த்தம்... சூப்பர்!