Friday, 27 March 2009

புத்த ஜோதிபச்சைக் கிளியொன்று
மிச்ச சிறகுகளோடு
வெளியில் வந்து..

அடுக்கிவைத்த
கட்டுகளைச் சுற்றி உலாவி,
கலைத்துபோட்ட
சீட்டுகளுக்குள்ளே துழாவி,

ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.

சொன்ன சொல் கேட்டால்,
தின்ன நெல் தருபவனிடம்
கொடுத்துவிட்டு,

மீண்டும் திரும்பியது
கூண்டுக்குள்ளேயே!!

போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Thursday, 26 March 2009

பட்டாம்பூச்சி விருது!

22/03/2009 அன்று நண்பர் வேத்தி பட்டாம்பூச்சி விருது அளித்தார்.
அவருக்கு என் நன்றிகள்!

என்னிடம் சேர்ந்த பட்டாம்பூச்சி - பட்டாம்பூச்சிகளாய் பறக்கவேண்டும்..நான் இந்த விருதை மூன்று பேருக்கு அளிக்கவேண்டும். கீழே புகைப்படத்தில் இருக்கும் மூன்று அன்பர்களுக்கும் இந்த விருதை அளிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.அகநாழிகை!
அகநாழிகை என அழைக்கபடும் பொன்.வாசுதேவன். ரசனையான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். கதை கவிதைகள் என எல்லா தளங்களிலும் முத்திரை பதிப்பவர். படிப்பவர்களை சலிப்படைய செய்திடாத நடையில் கதையெழுதும் ஆற்றல் கொண்டவர். உதா: "யமுனாவின் மனநோய்" என்ற கதை. இவரிடமிருந்து இன்னும் பல சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறேன். நீங்களும் இவருடைய தளத்தை உலாவுங்கள்.

வாழ்த்துக்கள் வாசுதேவரே!

சுரேஷ்!
சக்கரை என்ற ப்ளாக் தளத்தில் பல்வேறு ரசனையான பதிவுகளை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதி கலக்கிவரும் நண்பர். அனுபவம், அரசியல் நையாண்டி, கவிதை கிறுக்கல்கள் என பல்வேறு பிரிவுகளில் தன் அனுபவங்களை தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் அவ்வபோது இங்கே விஜயம் செய்யுங்கள்!

வாழ்த்துக்கள் சுரேஷ்!
கலை-இராகலை என்ற இவரின் வலைத்தளமே மிக அழகாக, தெளிவாக, கண்டபடி இல்லாமல் ஒரு ஒழுங்காக இருக்கும். வீடு சுத்தமாக இருந்தால்தானே விருந்தினரின் வருகை அதிகம் இருக்கும். வாழ்க்கைக்கு பயனுள்ள பல பதிவுகளை பகிர்ந்துகொள்பவர். இவரின் "தியானம்" பற்றிய பதிவு யாவருக்குமே பயனளிக்ககூடியது. தொடர்ந்து பல பயனுள்ள பதிவுகளை படைக்க வாழ்த்துகிறேன். உங்கள் பார்வையும் இத்தளத்தை பார்வையிடட்டும்.

வாழ்த்துக்கள் கலை!

உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு, பட்டாம்பூச்சியை தொட்டால் இந்த பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த மற்ற மூன்று ப்ளாகர்களுக்கு இந்த விருதை அளித்திடுங்கள்.

விருது பெற்ற தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

அன்புடன்
ஷீ-நிசி

Monday, 23 March 2009

அவளைப் பற்றி!1.

வானவில்லில்
கருப்பு நிறம் இல்லையாம்;
கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லை காண்கிறேன்!

அடியே -உன்
புருவங்களைத்தானடி சொல்கிறேன்!

2.

நாம் தானே
வலை விரிப்போம்
மீன் பிடிக்க;

மீன்கள் ரெண்டும்
வலை விரிக்கின்றன
எனைப் பிடிக்க!

உன் விழிகளைத்தானடி சொல்கிறேன்!3.


வழிந்து விழும் அருவிகள் தானே
தலையை நனைத்திடும்! -இங்கு
தலையிலிருந்துதான் அருவிகளே
விழுகின்றன!

உன் கூந்தலைத்தானடி சொல்கிறேன்!!

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Saturday, 21 March 2009

அப்பா
தத்தி தத்தி நடந்தேன்!
கைப்பிடித்து நடக்கப் பழக்கினாய்!

தத்தி தத்தி பேசினேன்!
வாயசைத்துக் கற்றுக் கொடுத்தாய்!

இயற்கை அழைப்புகளால் நான்
ஈரமாக்கிய ஆடைகளை மாற்றி,
வேறு உடை அணிவித்து
அழகுப் பார்த்தாய்!

அன்று,
நான் குழந்தையாய் இருந்தேன்!

எல்லாம் நீயெனக்கு
செய்தாய் கருத்தாய்!


தத்தி தத்தி நடக்கிறாய்!

தத்தி தத்திப் பேசுகிறாய்!

இயற்கை அழைப்புகளால்
ஈரமாக்கினாய் ஆடைகளை....

இன்று
நீ குழந்தையாய் இருக்கிறாய்!

எல்லாம் உனக்கு யாரோ
செய்கிறார்கள் கடமையாய்!

உன்னால் நான் இன்று
மூன்றடுக்கு மாடியில்;
என்னால் நீ இன்று
முதியோர் இல்லத்தில்...

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Thursday, 19 March 2009

என்னவளோ! அவனவளோ!

நண்பர் ஒருவர் ஒரு கவிதையொன்றை விரும்பி கேட்டார்...

மேற்கோள்:
எனது கல்லூரி நாட்களின் காதலி தற்பொழுது வேறொருவரை மணம் முடித்து நல்ல முறையில் சந்தோஷமாக குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றார், ஒருவேளை என்னை மணம் முடித்திருந்தால்கூட இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்திருப்பாளோ தெரியவில்லை. அவளது சந்தோஷத்தினை காண எனக்கு ரொம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது, இந்த சந்தோஷத்தை என்னால் தர முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது. இந்த சந்தோஷ/வருத்தத்தின் வெளிப்பாட்டை எனக்கு ஒரு கவிதையாக தர முடியுமா?


அந்த நண்பருக்காய் இந்த கவிதை
______________________________________________________________ஆயிரமாயிரம் ஆசைகள்
அமிழ்ந்துபோனதடி அடிமனதில்!

நீ இன்னொருவனின் கரம்
பற்றின அந்த நொடிப்பொழுதில்!

விழிகள் கண்ணீரை வடித்தே
வறண்டு போகின!

வருடங்களோ! உன்னை
நினைத்தே உருண்டு ஓடின!

இதோ!!!

என்னெதிரே வருகிறாள்,
மீண்டும் என் காதல் தேவதை...

அவளையே உரித்தபடி
அவள் கரங்களை பிடித்தபடி!
ஒரு குட்டி தேவதை!

அதிர்ஷ்ட தேவதையை
தோளோடு அணைத்தபடி,
அந்த அதிர்ஷ்டசாலி!

அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!

அவள் சங்கு கழுத்தில்,
மின்னி ஒளிர்ந்தன பொன்னகைகள்!

கண்கள் கண்ட காட்சியில்
மனம் புன்னகைத்தது!

என் அடிமனதில்,
அமிழ்ந்திருந்த ஆசைகளனைத்தும்

இதோ!
இவனால்!
இங்கே!
இன்று!

உயிர்த்தெழுந்திருக்கிறது!

நெருங்கிவிட்டாள்
அவனவள்! என்னருகே!

முட்டி கொள்ளுமோ?!
எங்களின் நினைவுகள்!

சற்றேனும் என்னால்,
சிறைப்பட்டு விடுமோ?!
அவளின் சந்தோஷங்கள்!

நொடியும் தாமதிக்காமல்
என் பாதங்களை,
திருப்பிக் கொண்டேன்!

அவள் நிழலும் கூட
என் மீது விழாதபடி..

அதோ!
என்னை கடந்து செல்கிறது!

என் காதல்...................

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Tuesday, 17 March 2009

கல்லூரி இறுதி நாள்!

விடைபெறுகின்றன
பட்டாம்பூச்சிகள்!

கற்பித்தவனை
கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும்
தண்டித்ததையும் மறந்து.....

நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,
துளிர்க்கும் துளிகளோடும்!

உருவங்களுக்கு இடையில்
புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!

பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!

கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை
கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!

பனிப் போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனிப் பாரிலெந்த பகையுமின்றி
உலவுமிந்த சமாதான புறாக்கள்!

நேற்றுவரை
அழகிய நட்பை
சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை
சுமந்து அலைவோம்!

நாம் சுற்றித் திரிந்து
தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும்
பட்டுப்பூச்சிகளுக்காய்..
மணம் வீசும்......

அந்த வனத்தில் வீசிய மணம்
நம் மனதில் வீசும் தினம்...

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Monday, 16 March 2009

மெளனமான நேரம்உன் உதடுகளின் ரேகைளில்
ஜாதகம் பார்த்திட,
என் உதடுகள் பிரியப்படுகின்றன!

உன் காதின் வளைவுகளை
கொஞ்சம் வருடி விட,
என் விரல்கள் பிரியப்படுகின்றன!

உன் கன்னங்களால்....
என் மார்பின் ரோமங்களை!
முத்தமிடு முழுமதியே -நீ
என் இதயத்தின் நிம்மதியே!

இதோ!
உன் இதயம் துடிக்கின்ற சத்தம்
என் இதயத்தில் நீ கேட்கின்றாய்!

எனக்காய் மட்டுமே துடித்திடுமா
என்று என்னை நீ கேட்கின்றாய்!

சீ! என்று

உன் முதுகினை சற்றே
என் கரங்களினிடையில்
சிறையிலிடுகிறேன்...

விந்தை!!
உன்னை சிறையிலிட்டு
உன்னிடமே கைதியானேன்..

உன் கன்னங்கள்
என் இரு உள்ளங்கைகளில்
தஞ்சமடைந்தன!

தலை சாய்த்து
பார்க்கும் என்னை,
தலை உயர்த்தி
பார்க்கிறாய் பெண்ணே!

நம் இரு விழிகளும
பேசிக்கொள்கின்றன!

நம் இரு உதடுகளும்
பார்த்துக்கொள்கின்றன!

நொடியின் கால அளவென்பது
ஒரு சிட்டிகையின் நேரம்!
ஒரு கண்ணிமைக்கும் நேரம்!

இனி
நம் உதடுகள் நெருங்கி
வந்துக்கொண்டிருக்கும்
நேரங்களையும்
சேர்த்துக்கொள்ளலாம்!

இதழ்களுக்கு
இடையிலான இடைவெளி
குறைந்துக்கொண்டேயிருக்கிறது!

இதயத்தில் உண்டான
இதமான வலி
கூடிக்கொண்டேயிருக்கிறது!

சட்டென்ற ஓர் கணத்தில்
இதழ்கள் நான்கும்
இணைந்துக்கொண்டன!

வயதுக்கு வராத கண்களை
இமைகள் நான்கும்
மூடிவிட்டன..

கூந்தல்களினிடையில் விரல்களும்,
விரலிகளினிடையில் கூந்தலும்,
சிக்கிக் கொண்டன!

எதையும் தொலைக்காமலே
எதையோ தேடிக்கொண்டிருந்தன!

ஜாதகம் பார்த்த -என்
உதடுகளிரண்டும் சொன்னது,

உன் உதடுகளுக்கும் ஜாதகம்
தெரிகின்றதாம்....

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Friday, 13 March 2009

போர்க்களமா வாழ்க்கை?
போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை!

சோர்ந்து விடாதே!
இதுதானா வாழ்க்கை என்று
கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே!

இல்லையென்பார்,
இருப்பதைக் கொடுப்பாய்;
இன்னமும் என்பார்
இதுதான் முடியும் என்பாய்!

மறுகணமே
கஞ்சப் பிரபு என
புறம் கூற புரண்டு நிற்கும்
பஞ்சப் பிரபுவின் நாக்கு!

கொடுத்ததை
திரும்பக் கேட்டால்
கோமாளி என்பான்;
இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ
ஏமாளி என்பான்!

நாம் இழைக்கும்
தவறுகளிலே
கதைப் பேசி
பிழைக்கும் கூட்டங்கள்

இந்த நயவஞ்சக
நாக்கினைக் கண்டு;
கதற வேண்டாம் -உன்மனம்
பதற வேண்டாம்!

வீணாய்
ஒலித்துக்கொண்டிருக்கும்
ஓநாய்களின் ஒப்பாரி சத்தமிது..

தானாய் குறைந்து விடும்;
ஒரு நாள் காணாமலே
கறைந்து விடும்!

கருணையற்ற கூட்டம்
காணும்படி,
கண்ணீரை மட்டும்
சிந்தி விடாதே!

இவர்கள் -உன்
விழி நீரிலே விளையாடும்
விந்தை மனிதர்கள் -உன்
கண்ணீரிலே கவிபாடும்
கந்தை மனிதர்கள்!

வில்லில் பூட்டின அம்புக்கும்,
வீணர்களின் நாவிலே மாட்டின
வார்த்தைகளுக்கும்,
அதிக வித்தியாசமில்லை!!

இரண்டுமே,
காயப்படுத்திவிட தயாராய்....

அம்பின் கூர்மையும்
மழுங்கி விடலாம்;
வம்பளக்கும் அவர்களின்
நாவுகளோ ஒருநாளும்
மழுங்கி விடாது!

புறம் கூறிடும்
வஞ்சக கூட்டத்தின்;
நிறம் மாறிடும் நாட்கள்
வெகு தொலைவில்
அல்ல தோழா!

நன்றி கெட்ட
மனிதனின் நாக்கு;
அப்படி இப்படி
புரளத்தான் செய்யும்!

அவனுக்கும்
ஒரு கூட்டம்;
எப்படி எப்படியோ
திரளத்தான் செய்யும்!

போகட்டும்
அவர்களிடம் இல்லாத,
ஆனால் உன்னிடம் இருக்கும்
ஒரே ஆயுதம் மன்னிப்பு!

இவர்களைப் பற்றி
இனி மனதிலே
சிந்திக்கவும் வேண்டாம்!
மறந்தும் கூட
நிந்திக்கவும் வேண்டாம்!

காலம் கண் போன்றது!
கவனித்துக்கொண்டே இருக்கிறது!!


Wednesday, 11 March 2009

பசித்த வேளை
சாப்பிடு மா...
செல்லம் இல்ல, சாப்பிடு மா..
இப்ப சாப்பிடல...

அதோ பாரு,
அந்த அண்ணாகிட்ட கொடுத்திடுவேன்..

ம்ம்... வேணா…ஆஆ!
ம்ம்ம்ம்ம்... வேணா…ஆஆ!

வாப்பா.. இங்க வாப்பா
இந்தாப்பா...

கொடுத்திடட்டுமா?!....

அய்யோ, அந்த அண்ணா வரான்..
இந்தா ஊட்டிக்க.. ஊட்டிக்க..

ம்ம்.. சமத்து...

இந்தா, இன்னொரு வாய்!!


சாப்பிடு மா...
செல்லம் இல்ல... சாப்பிடு மா..
இப்ப சாப்பிடல.......


Tuesday, 10 March 2009

நாலிதழ்கள்!
நேற்றிரவு,
நீயும் நானும்
முத்தமிட்டு கொண்டோமே....

அவை நாளிதழ்களில் வந்தன;
தெரியுமா?! என்றான்!

அச்சத்தின்
உச்சத்திற்கே சென்றேன்!!

எனைப்பார்த்து,
புன்னகைத்தபடியே
அவன் கூறினான்!!

உன் இதழ்கள் இரண்டு!
என் இதழ்கள் இரண்டு!

பின்னென்ன..
நாலிதழ்கள்தானே!!!

Friday, 6 March 2009

பிள்ளைப்பேறுஓர் உயிர்தரிக்க
உதவாதவளா நான்??...

மணமுடித்த மூன்று மாதங்கள்
கேட்டார்கள் சிரித்தபடி!

அடுத்தமாதம் கேட்டார்கள்
கொஞ்சம் அலட்சியபடி!

தேதிக்குப்பின் பிறந்திடும்
ஒவ்வொரு நாளுமே!
தேர்வெழுதிட்ட நிலைதான்!

அடுக்கிவைத்த சீட்டுக் கட்டுகள்
ஓவ்வொருமுறையும்
சரிந்திட்டால்.....

வேலைக்காரியைவிடவும்
கேவலமாய் ஆனேன்
ஒரு வருடத்தில்!

பலிக்கவில்லை
மாமியாரின் ஆசையும்!
சாமியாரின் பூசையும்!

ஒப்புக்கு அழைத்தார்கள்
என்னையும் சுபகாரியங்களுக்கு!

என்னோடு மணமானவர்களுக்கு
கையில் ஒன்று! இடுப்பில் ஒன்று!

உறவுகள் ஓப்பீடு செய்தன...

கருத்தரிக்க இருக்காமலா
கருத்தரித்தேன் பூமியில்?!

கருப்பை இருக்கவேண்டிய
இடத்தில் இறைவன்
வெறு(ம்)ப்பை வைத்தானா?

மனம் அசைபோட்டது...

பிள்ளையில்லா தாய்
இங்கிருக்கிறேன்!

தாயில்லா பிள்ளை
எங்குமிருக்கின்றன!

பெத்தெடுத்து தாயாகலாம்!
தத்தெடுத்தும் தாயாகலாம்!

இதோ நானும் தாயாகிவிட்டேன்!