Thursday, 26 February 2009

விந்தை
கிழிக்கப் பட்ட காகிதங்கள்
கையிலே சுமையாய்;

உதட்டின் விளிம்பின் வரையிலும்
வந்துவிட்ட உமிழ் நீர்;

அவசரகதியில்
இயற்கையின் அழைப்பு;

இருந்தும்,
அவன் எதையுமே இறைக்கவில்லை
சாலையோரத்தில்..

காரணம்!

அவன் நின்றுக் கொண்டிருக்கும்
தேசம் இந்தியா இல்லையே!!!

Tuesday, 24 February 2009

சில காதல் தூறல்கள்!உன் பெயரை
உச்சரிக்கும்போதெல்லாம்,
எச்சரிக்கிறது என் மனது!

விரைவில்...
சர்க்கரை நோய் வரப்போகிறதென்று!!

*

பூவுலகில் மனிதரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
நிலவோடு ஒப்பிடுகிறார்கள்...

என் தேவதையே....

வானுலகில் தேவரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
உன்னோடுதான் ஒப்பிடுகிறார்கள்!!

*

நான் உன்னை அதிகமாய்
நேசிப்பதில்லையென்று; – நீ
என்னிடத்தில் கோபம் கொள்கிறாய்....

உனக்கு தெரியவில்லையடி!!

நீ கோபப்படும் நேரங்களில்தான்
நான் உன்னை மிக அதிகமாய்,
நேசிக்கிறேனென்று!!!

Thursday, 19 February 2009

தமிழ் "நேற்று இன்று நாளை"

நண்பர்களே!

கடந்த 10-08-2008 அன்று V.G.P -ல் உலக தமிழ் மக்கள் அரங்கம் என்ற ஆர்கூட் கம்யூனிட்டி நடத்தின முதல் ஆண்டு விழாவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திரு. சீமான், மற்றும் கவிஞர்.நெல்லை ஜெயந்தா அவர்களின் முன்னிலையில் நடந்த கருத்தரங்கம் மற்றும் கவியரங்கத்தில்,

"தமிழ் நேற்று இன்று நாளை" என்ற தலைப்பில் 7 கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். அடியேனும் அதில் கலந்துகொண்டு கவிதை படைத்தேன். இதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.தமிழ் "நேற்று இன்று நாளை"


நேற்று பெய்த மழையில்,
மலர்ந்த சின்னஞ்சிறு செடியுமல்ல....
படர்ந்து செல்ல வழியில்லாமல்,
உலர்ந்து போன கொடியுமல்ல....

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
பூத்த அன்னைத் தமிழ்!
இந்த சங்கத்தமிழ்! அது தங்கத்தமிழ்!
எங்கள் செந்தமிழ்!!!

அன்று 6-ஆம் நூற்றாண்டின்...
கல்வெட்டிலே வலம் வந்தவள்,
இன்று 21-ஆம் நூற்றாண்டின்..
இண்டர்நெட்டிலும் வலம் வரவும் தெரிந்தவள்!

அன்று ஓலைச்சுவடிகளிலே
வலம் வந்தவள்,
இன்று மேலை நாட்டினர் கண்டெடுத்த
அலைபேசிகளிலும் வலம் வரத் தெரிந்தவள்!

எங்கள் தமிழ் ஒருவகையில்
தண்ணீர் போன்றது!

கிடைக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப
தன்னை பொருத்திக்கொள்ளும்
திறமையுள்ளதால்,

எங்கள் தமிழ் ஒருவகையில்
தண்ணீர்போன்றதுதான்....

தண்ணீருக்கு சிறப்பு
நிறமில்லாமலிருப்பது!

எம் தமிழுக்கு சிறப்பு
சிரமமில்லாமலிருப்பது!

அழிக்க நினைப்பவர்களே,
தமிழ் அழியுமென நினைப்பவர்களே...

வளைத்தவுடன் ஒடிந்துவிட -நீங்கள்
நினைத்தவுடன் அழித்துவிட -தமிழ்
உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில்
பூத்த பூச்செடியல்ல....

அது பூமியின் அடுக்குகளிலெல்லாம்,
வேர்விட்டு படர்ந்திருக்கும் ஆலமரம்...
மிகவும் ஆழமான மரம்!!

காக்க நினைப்பவர்களே!
தமிழை காத்திட துடிப்பவர்களே....

வேற்று மொழிக்கு கரிப்பூசி,
தேற்றிக்கொள்ளும் நிலையில்,
தமிழ் இல்லை!

வானம் போல படர்ந்திருக்கும் தமிழை
ஊனம் போல சித்தரிக்காதீர்கள்.....

உங்கள் சந்ததியையும் பார்த்தது...
உங்கள் மூதாதையரின் சந்ததியையும் பார்த்தது....

நாளை சந்திரனிலும் ஒரு சந்ததி வாழும்...

மேலிருந்து ஒரு குழந்தையின்
மெல்லிய குரல் ஒலிக்கும்....

"அம்மா" என்று

எங்கள் தமிழுக்கு என்றும் அழிவில்லை...
அதற்கு நேற்று இன்று நாளை என்று
காலங்களுமில்லை...


வாழ்க தமிழ்!

*

Tuesday, 17 February 2009

வீதியில் ஒரு சேதி!அத்தை..... சாப்பிடவாங்க,
நேரமாச்சு!!

பாட்டி.. பாட்டி..
இன்னொரு கதை சொல்லு,

அம்மா... இந்தாம்மா
கைசெலவுக்கு வச்சுக்க இத,

பாதசாரிகளே!!

வேண்டாம்.....

எழுப்பாதீர்கள் அவளை!
கலைக்காதீர்கள் அவள் கனவை!

*