Thursday, 3 January 2008

காதல் செய் காதலா!



































மழைத்துளிகள்
தண்ணீராகின -சில
மணித்துளிகளில்!

வானமும், பூமியும்
சங்கமித்ததில்....

குடைபிடித்தும்
நனைகின்றது
அவள் நிழல்!

பாதங்கள் ரெண்டும்
பின்னியபடி!
மனமோ அவனை
எண்ணியபடி!

உணர்த்தினாள் காதலை....
என்ன சொல்வானோ நாளை?!
எண்ண சொல்வானோ நாளை!


ஷீ-நிசி

Tuesday, 1 January 2008

கரை சேராக் காதல்!




கரையில் நின்றிருந்தேன்....

ஒரு அலையினைப்போல...
வேகமாய் வந்தாய்!
கால்களை தழுவினாய்!

குனிந்து உன்னை
தொடுமுன்னே.. மீண்டும்
அதே வேகத்தில்
சென்றுவிட்டாய்!

மீண்டும் வா...
மீண்டும் எனைத்
தீண்ட வா..

உனக்காய் காத்திருப்பேன்..
என் சிற்றலையே! -இதோ,
இந்த கரையிலேயே....

புத்தாண்டு!

இதுவும் ஒரு சாதாரண
விடியல்தானே!

இதற்கு மட்டும் என்ன
இத்தனை வரவேற்பு
கொடுக்கிறாய்?!

வருடத்திலே தொடங்கும்
முதல் விடியலாம்;
வாழ்விலே தொடரும்
தவறுகள் மடியலாம் -என்று
எண்ணுகிறாயே!

ஒருவேளை அதற்காகவா?!

உன் குழந்தைகளின்
பொத்தலாடைகளினால்;
தெருக் குழந்தைகள்
புத்தாடை அணிவார்களே!

ஒருவேளை அதற்காகவா?!

முதியோர் இல்லங்களில் வாழும்
மூத்தோர் உள்ளமும், வயிறும்
உன்னால் நிறைந்திடுமே
அந்நாளிலே!

ஒருவேளை அதற்காகவா?!

உன் வீட்டிலே
தயாரிக்கப்படும் இனிப்புகள்;
உன் பகைவர்களின் வீட்டிலே
ருசிக்கப்படப்போகிறதே!

ஒருவேளை அதற்காகவா?!

ஏதோவொரு
சூழ்நிலையில் உண்டான
கோபதாபங்களை
மறந்து, மன்னித்து
யாவருடனும் நட்புறவு
கொள்ளத் துடிக்கிறாயே!

ஒருவேளை அதற்காகவா?!

இல்லாத நிலையிலும்
இருப்பதே போதுமென்று
கடன் வாங்காமல்
இன்முகத்துடன்
இந்நாளை வரவேற்கிறாயே

ஒருவேளை அதற்காகவா?!

அப்படியென்றால்,

நண்பா,
கண்டிப்பாக உனக்கு மட்டும்
இது சாதாரண விடியலில்லை!
இதற்கு நீ
எத்தனை வரவேற்பு
கொடுத்தாலும் தகும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!



ஷீ-நிசி