Saturday, 26 April 2008

அழகிய தீவே!





















பூக்களின் வாசம் உரைத்திட
பூவே!! நாவெதற்கு?! -உன்
புன்னகையழகை வரைந்திட
தீவே!! நானெதற்கு?!

கிளிகள் பேசிக்கொள்ளும்
அலகை* காண ஓலியெதற்கு?! -உன்
விழிகள் பேசிக் "கொல்லும்"
அழகை காண மொழியெதற்கு?!

தென்றலது பயணம் செய்ய
எட்டுத்திசைகளெதற்கு?! -உன்
கொஞ்சும் மொழி குரலிருக்க
ஏழிசைகளெதற்கு?!

விண்ணோடு நிலவிருந்தால்
அழகதற்கு!!
என்னோடு நீயிருந்தால்
அழகெனக்கு!!


---------------------------
அலகை (நாசி, மூக்கு)


ஷீ-நிசி

Sunday, 13 April 2008

பூக்களைப் பறிக்காதீர்கள்!!



















செடியவள் சிரசிலிருந்து
பிடுங்கப்பட்ட ரோஜா ஒன்று,
நொடியிலிவள் சிரசினிலே
இடம் மாறியது இன்று!

நேற்றிரவு செடியவளுக்கு,
சூடிச்சென்ற அவள் காதலன்
இன்றதைக் காணாமல்,
தேடிக் கண்ணீர்விடுகிறான்..

அவை வழிந்தன,
பனித்துளிகளாய்!!
செடியின் மீது….

ஓ! அதனால்தான்
பூங்காக்களில் எல்லாம்,
“பூக்களைப் பறிக்காதீர்கள்”
என்ற பலகையோ?!


ஷீ-நிசி

Thursday, 3 January 2008

காதல் செய் காதலா!



































மழைத்துளிகள்
தண்ணீராகின -சில
மணித்துளிகளில்!

வானமும், பூமியும்
சங்கமித்ததில்....

குடைபிடித்தும்
நனைகின்றது
அவள் நிழல்!

பாதங்கள் ரெண்டும்
பின்னியபடி!
மனமோ அவனை
எண்ணியபடி!

உணர்த்தினாள் காதலை....
என்ன சொல்வானோ நாளை?!
எண்ண சொல்வானோ நாளை!


ஷீ-நிசி

Tuesday, 1 January 2008

கரை சேராக் காதல்!




கரையில் நின்றிருந்தேன்....

ஒரு அலையினைப்போல...
வேகமாய் வந்தாய்!
கால்களை தழுவினாய்!

குனிந்து உன்னை
தொடுமுன்னே.. மீண்டும்
அதே வேகத்தில்
சென்றுவிட்டாய்!

மீண்டும் வா...
மீண்டும் எனைத்
தீண்ட வா..

உனக்காய் காத்திருப்பேன்..
என் சிற்றலையே! -இதோ,
இந்த கரையிலேயே....

புத்தாண்டு!

இதுவும் ஒரு சாதாரண
விடியல்தானே!

இதற்கு மட்டும் என்ன
இத்தனை வரவேற்பு
கொடுக்கிறாய்?!

வருடத்திலே தொடங்கும்
முதல் விடியலாம்;
வாழ்விலே தொடரும்
தவறுகள் மடியலாம் -என்று
எண்ணுகிறாயே!

ஒருவேளை அதற்காகவா?!

உன் குழந்தைகளின்
பொத்தலாடைகளினால்;
தெருக் குழந்தைகள்
புத்தாடை அணிவார்களே!

ஒருவேளை அதற்காகவா?!

முதியோர் இல்லங்களில் வாழும்
மூத்தோர் உள்ளமும், வயிறும்
உன்னால் நிறைந்திடுமே
அந்நாளிலே!

ஒருவேளை அதற்காகவா?!

உன் வீட்டிலே
தயாரிக்கப்படும் இனிப்புகள்;
உன் பகைவர்களின் வீட்டிலே
ருசிக்கப்படப்போகிறதே!

ஒருவேளை அதற்காகவா?!

ஏதோவொரு
சூழ்நிலையில் உண்டான
கோபதாபங்களை
மறந்து, மன்னித்து
யாவருடனும் நட்புறவு
கொள்ளத் துடிக்கிறாயே!

ஒருவேளை அதற்காகவா?!

இல்லாத நிலையிலும்
இருப்பதே போதுமென்று
கடன் வாங்காமல்
இன்முகத்துடன்
இந்நாளை வரவேற்கிறாயே

ஒருவேளை அதற்காகவா?!

அப்படியென்றால்,

நண்பா,
கண்டிப்பாக உனக்கு மட்டும்
இது சாதாரண விடியலில்லை!
இதற்கு நீ
எத்தனை வரவேற்பு
கொடுத்தாலும் தகும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!



ஷீ-நிசி