Thursday, 29 November 2007

உயிர்த்தோழன்!


கைப்பிடி அளவு இதயம்,
கைத்தடி நழுவும் வரையும்,

நிரப்பிக்கொண்டேயிருக்கிறது,
எண்ணற்ற நினைவுகளை -அதில்
கொஞ்சமே கொஞ்சந்தான்,
பெண்ணற்ற நினைவுகள்!!

அனைவருக்குமே,
ரகசிய சிநேகிதன்!!
அவரவர் இதயம் மட்டுந்தான்!

படுக்கையிலே!! -நாம்
படுக்கையிலே.......

துக்கமிகுந்து ஏங்கினாலும்,
ஏக்கமிகுந்து தூங்கினாலும்,

நம் நிலை கண்டு, "துடிப்பது"
"துடித்துக்கொண்டேயிருப்பது"
நம் இதயம் மட்டும்தான்.....

இதயத்தில் ஓட்டையாம்!!!
இருப்பதும் கூட சிறப்புதான்!!

சேமிக்கப்படும் சோகங்களில்,
சிலவாவது செலவாகுமே!!
ஓட்டையின் வழியே.....

இதயம்!!

இறைவன் ஒவ்வொருவனுக்கும்
ஒட்டியனுப்பிய உயிர்த்தோழன்!

நாம் இறந்தபிறகும்
நம்மோடே இறந்துவிடுவதால்..

இதயம்!!

"உயிர்த்தோழன்" தான்!


ஷீ-நிசி

இன்பத் தீபாவளி!

எண்ணை சொட்டும் குளியல்!
கண்ணை பறிக்கும் புத்தாடை!
விண்ணை மிரட்டும் பட்டாசுகள்!
வண்ண வண்ணத்தில் பலகாரங்கள்!

இது உம் தீபாவளி!

குளியலுக்காகும்
எண்ணெய் பணத்தை,
சமையலுக்காய் எடுத்துவைத்து,

தண்ணீரில் ஒரு குளியல்!

இருப்பதிலேயே கிழியலில்லாத,
நேற்றிரவு துவைத்துவைத்த ஆடை!

கேட்ட சத்தங்களிலேயே
வெடித்து விட்ட திருப்தி!

அரைகிலோ ரவையில்,
அனைவருக்கும் கேசரி!

இதுவும் தீபாவளி!


ஷீ-நிசி

Thursday, 19 July 2007

கொஞ்சம் கொஞ்சும் காதல்!

வாடி நிற்குமிந்த
பூவைப் போல! -நானும்

பாவை உனைத்
தேடி நிற்கிறேன்! -விழி

காண இயலாமல்
வாடி நிற்கிறேன்!

வாயென் வண்ண விழியாளே!
வந்தால்.... வசமாவேன்!
நானுன் அன்பு மொழியாளே!

குயிலொன்று பாடியது
யமுனை ஆற்றிலே! -என்
வீட்டோரம் கேட்டது...
அலையுமிந்த காற்றிலே!

சின்ன சின்ன சொல்லெடுத்து
காற்றின் வழியெனக்கு -உன்
குரலனுப்பினாய்.....

சுமந்துவந்த காற்றை
சிறைபிடிக்க சிறகடித்தன....
கீழிருந்து பறவைகளும்,
மேலிருந்து தேவதைகளும்!!

ஏன் குறைவாக
உண்கிறாய் என்றேன்?

உடல் குறைப்பு என்றாய்...

முழுமையாக
இருந்தால்தானடி
அது நிலவு...

முக்கால் பாகம்
தேய்பிறையென்றால்
ஆனதது களவு!

ஏன் அழுகிறாய் என்றேன்?
காரணம் சொன்னாய்...

சிரித்தேன்!!!!

ஏன் சிரிக்கிறீர்கள் என்றாய்?

பிறகென்ன!!!
வானமது அழுதால்,
யார்தானடி பெண்ணே,
அழுவார்கள் என்றேன்!

சத்தமாக சிரித்தாய்...

அட! இப்பொழுது
இடி இடிக்கிறதே என்றேன்....

இன்னுமதிகமாய் சிரித்தாய்!

இப்பொழுது,
நீ அழவில்லை!

இடி இடித்தால்
மழை நிற்குமென்பார்கள்!

உண்மைதான்....
அன்று கண்டேனடி
உன் விழிகளிலே!

இதோ, வருகிறேனென்று
சொன்னவளே!

வானிலை அறிவிப்பாகிவிட்டதடி!
உன் அறிவிப்பும்...

இனி வரமாட்டேனென்று
சொல்லிவிடு....
வானிலை அறிவிப்பினைப் போல...

நிச்சயமாய் காத்திருக்கிறேன்...
உனக்காய்....


ஷீ-நிசி

Monday, 7 May 2007

பூமியில் ஒரு வானவில்!

வளைந்திருக்கவேண்டிய
வானவில்லொன்று,
கலைந்துப் போனதில்..
வானம் வர்ணமானது!

கலைந்துபோன
வானவில்லைக் கண்டு!
சற்றே கலங்கினர்
கடற்கரை காதலர்கள்!

எண்ணற்ற
நட்சத்திரங்களினிடையில்
தோன்றும் வானவில்லை,

மண்ணென்ற
நட்சத்திரங்களினிடையில்
தோன்றவைப்போமா?!

காதலன் முடிக்குமுன்பே
தயாரானாள் காதலி,
வானவில்லைப் பெற்று
தாயாகிட....

மண்ணில் கால் பதித்தனர்.
கண்ணில் கண் பதித்தனர்,
உயரே கரம் பதித்தனர்!

விழுந்தால்.....

நீ என்மீது,
நான் உன்மீது!
நாம் மண்மீது! -என்ற
இடைவெளியில்
விலகி நின்றனர்

ஆர்வம் தாளாமல்,

கடலுக்கடியிலிருந்த
கற்பாறைகளெல்லாம்
சிரமம் பார்க்காமல்
சிரம் நீட்டின வெளியே,

கட்டியணைக்காத
காதலர்கள் வழியே.
கட்டியெழுப்பிய
கரங்களின் வழியே,

உருக்குலைந்த வானவில்
உருப்பெற்றது மீண்டும்!

இம்முறை
பூமி வர்ணமானது!


ஷீ-நிசி

Monday, 16 April 2007

கவிதைக்கு ஒரு கவிதை!சில நேரங்களில்
வெள்ளை உடையின் மீது
கவிதைகள் பொறித்திருப்பதைக்
கண்டிருக்கிறேன்;

ஒரு கவிதையே
வெள்ளை உடை அணிவதை
இப்பொழுதுதான் காண்கிறேன்!


ஷீ-நிசி

உயிர்க்காப்பான்மழையின் தூறல்
விழுமுன் அணிகிறாய்
மழைக்கவசம்!

தலையில் கீறல்
விழுமுன் அணிவாயோ?!
தலைக்கவசம்!


ஷீ-நிசி

உயிர்ச்சிலைகள்

உயிர்ச்சிலைகள்

கடல் கொண்ட பாறையில்
காதல் கொண்டிருந்தனர்!

அலைகள் மட்டுமே
அவர்களின் அருகில்!
அவைகள் மட்டுமே!
அவர்களின் அருகில்!

யாருமற்ற காரணத்தினால்,
வீருபெற்ற காமத்தினால்,

கடைவிழி ஒப்புதல்!
இடைவழி ஆரம்பமாகியது!
இடைவெளி குறைவாகியது!

அவன் அவளில் ஒளிந்திருந்த
ஏவாளை கண்டான்!

அவள் அவனில் ஒளிந்திருந்த
ஆதாமை கண்டாள்!

கடலின் கண்களை,
மூடிட எத்தெனித்து!
வீசினர் தம் தம் உடைகளை!

கடலோ!
வீசியெறிந்த ஆடைகளை
அங்கங்கே வைத்து -தன்
அங்கத்தில் அழகு பார்த்தது!

முடிவில் காணமுடியாதபடி
தன்னி(ரீ)ல் ஒழித்துக்கொண்டது!

மோகமும் காமமும்
எந்த சேவலும் கூவாமலே
விழித்துக்கொண்டன!

திடீரென்று ஒரு
அசரீரி குரல்! வானில்!

யார் நீங்கள்!

காதலர்கள்!

உதடுகள் நடுங்கின!
உடல்கள் ஒடுங்கின!

உண்மைக் காதலர்களா?
உல்லாசக் காதலர்களா?

இவன் தொட்ட மேனியை
எவன் தொடவும்
அனுமதிக்கமாட்டேன்!

அவள் கூறினாள்!

நான் தொட்ட மேனியை -ஓர்
ஆண் தொட நினைத்தாலும்
விட மாட்டேன்!

அவன் கூறினான்!

உங்கள் அன்பின் வலிமையை
சோதித்துப் பார்க்கவேண்டும்?

நாங்கள் தயார்!

நான்கு உதடுகளும்
ஒரே வார்த்தையை
ஒரேப் பொழுதில்
உச்சரித்தன!

உங்கள் அன்பின் அகலம்
காணவேண்டும்!

உதடு வழியல்ல!
உடல் வழியில்!

இடைவெளி இருவர்
நுழையும் அளவில்!

வில்போல்
வளைந்திடல் வேண்டும்!

சிலை போல்
இருந்திடல்வேண்டும்!

எத்தனை நாட்கள்!?

இன்னொரு காதலர்
இங்கே வந்திடும்வரையில்!


ஷீ-நிசி

நீயும்! நானும்!போதும் இது போதும்!
உன் புன்னகை முகத்தில்
மோதிக்கொண்டிருக்கின்றன!
என் எண்ணங்கள் மட்டும்

வழியை விலகாமல் செல்ல
புரவியின் கண்களுக்கு சேனைகள்

விழியை விலக்காமல் இருக்க
இப்பிறவியின் கன்னங்களுக்கு கைகள்!

என் உளியில் கருவான
உயிரின் சிலையா நீ?!

உன் எழிலில் உருவான
சிலையின் சிற்பியா நான்?!

நீ ஏதோ பேசுகிறாய்!

வார்த்தை மட்டும் என்
செவியை எட்டவில்லை!

மறுமொழியிட,

வார்த்தை ஒன்றும் என்
உதடுக்கு கிட்டவில்லை!

இளமை அழியாது!
கனவு கலையாது!

உளியால் உண்டாக்கின நம்மை
ஈட்டியால் உருக்குலைக்கும் வரை!


ஷீ-நிசி

நிலாப் பெண்


அலையில்லா கரையில்
இலையெல்லாம் தரையில்

மலரின் வாசத்தை
முகர்ந்து -நீ
வெளியிட்ட சுவாசத்தில்
நகர்ந்து சென்றதா
அந்த இலைகள்?

இது நிலவா, சூரியனா
இல்லை நிலாச் சூரியனா?

அவன் உன்னிடம்
வர விரும்பி
உண்டான பாதையா?! -இல்லை

நீ, அவனிடமிருந்து
இறங்கிவந்து
உட்கார்ந்த தேவதையா?!

நீ அமர்ந்துக்கொண்டதால்
மரத்தின் நிழலில் கூட
இலைகள் பூத்திருக்கிறதே?!

வளைந்துகொண்டிருப்பது மரமா?!
இல்லை நீ சாய்ந்துகொண்டிருப்பது
மரம் பெற்ற வரமா?!

போ பெண்ணே போ!
பொழுது புலரப்போகிறது
என்னை எழுப்பிவிட
சூரியன் புறப்படுகிறான்!


ஷீ-நிசி

எப்போதடா வருவாய்?
எப்போதடா வருவாய்?
என் மணாளா!

திறந்தும் என் விழிகள்
எதையுமே காணவில்லை -உன்
நினைவுகளில் உறங்கியதால்!

மறந்தும் என் இதழ்கள்
மொழியொன்றும் பேசவில்லை -உன்
நினைவுகளில் இறங்கியதால்!

நினைவுகள் கலைந்திடுமோ என்று
உள்ளங்கைகளின் உஷ்ணத்தில்
நம் நினைவுகளை இறுகப் பிடிக்கின்றேன்!

நீ அழைத்தால்
எந்தத் திசைக்கும் வந்திடும்
ஆவலில் என் பாதங்கள்!


எப்போதடா வருவாய்?
என் மணாளா!


ஷீ-நிசி

Wednesday, 14 February 2007

பிப்ரவரி 14-ல் ஒரு காதல் கடிதம்

முகவரி அறியாதவன் எழுதின,
முத்தான வரிகளை ஏந்தின,
வாழ்த்து அட்டையை..

விலை கொடுத்து வாங்கினேன்,
என் முளை* விடுத்த காதலுக்காய்;

பட்டு பூச்சியின்
பரிணாம நிலையில்தான்
நானும் என் காதலும்;

வானவில்லாளே!
வளைந்து கொடு,
பட்டாம் பூச்சியாகி
பறந்து விடுகிறேன் - இல்லை
யாரும் எட்டாப் பூச்சியாகி
இறந்து விடுகிறான்.

காதல் ராகத்தில்
சந்தி பிழையடி நீ!
அந்த காரிருள் மேகத்தின்
அந்தி மழையடி நீ.

இடது கையில்
இதயத்தை இறுகிக்கொண்டு,
வலது கையில்
வாழ்த்து அட்டையை வழங்கிக்கொண்டு
என் முன்னே நிற்கும்
உன் முன்னே
மண்டியிட்டு சொல்கிறேன்,

நம் இமைகள்
கொண்ட உறவால்
உண்டான ஜீவன்
இந்த காதல்..

இதழ் பிரித்து
வார்த்தை சேர்த்து
சொல் பெண்ணே!

இந்த நாள்,
இதய வலியிலிருந்து நான்
இனி சுகம் பெரும் நாளா?! -அல்லது
இனி இதயமே சுமையாகும் நாளா?!

காத்திருக்கிறேன்,
காதலுடன், காலமுடன்...

----------------------------------------------------
(*விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்களே! அந்த முளை... என் காதலும் இன்று முளை விடுத்துள்ளது நாளை பயிராய் வளர்ந்திட அவளின் கவன மழை பொழிந்திட வேண்டும்)

Saturday, 20 January 2007

தீக்குச்சி

அம்மா தடுத்தாள்!
சின்னப் பிள்ளைகள்
தீக்குச்சிகளை கையில்
எடுக்கக் கூடாதாம்!

அம்மா,
உனக்கு தெரியாதா?!
எனைப் போல ஒரு
பிஞ்சுக்கரம்தானே
இவைகளையெல்லாம்
அடுக்கியது என்று!

நகரத்துக் குழந்தை,
தீக்குச்சியை தொட்டால்
திட்டு விழும்!

கிராமத்துக் குழந்தை,
தீக்குச்சியை தொட்டால்தான்
சோறே விழும்!

குழந்தையும் தெய்வமும் ஒன்றாமே!

ஒரு தெய்வம்
ஓட்டலில் துடைக்கிறது!

ஒரு தெய்வம்
தீக்குச்சி அடுக்குகிறது!

ஒரு தெய்வம்
ஸ்பேனரால் அடிவாங்குகிறது!

ஒரு தெய்வம்
பிச்சை எடுக்க வைக்கப்படுகிறது!


கீழே,
தெய்வங்கள் குழந்தைகளாய்
வேலை செய்துகொண்டிருக்கின்றன!

மேலே,
குழந்தைகள் தெய்வங்களாய்
பார்த்துக்கொண்டிருக்கின்றன!!


ஷீ-நிசி